புனேவை சேர்ந்த கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனமான எகா (EKA) அதன் புதிய எலக்ட்ரிக் பேருந்தை எகா இ9 (EKA E9) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பேருந்தை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்
கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக கமர்ஷியல் வாகனங்களின் கேபினை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக விளங்கும் பைனாகிள் இன்டஸ்ட்ரீஸ் (pinnacle industries)-இன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கான துணை நிறுவனம், எகா ஆகும்.
இத்தகைய புனே இவி பிராண்டில் இருந்து புதிய 9-மீட்டர் முழு எலக்ட்ரிக் & பூஜ்ஜிய மாசு உமிழ்வு பேருந்தாக எகா இ9 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எகாவின் முதல் பேட்டரி -எலக்ட்ரிக் பேருந்தாக கொண்டுவரப்பட்டுள்ள எகா இ9 ஆனது நேர்த்தியான தோற்றத்தில், அதிகப்படியான இயக்க ஆற்றல் & ரேஞ்ச் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், வளையாத இரும்பினாலான சேசிஸின் அடிப்படையில் இ9 வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் பேருந்து புனேவில் மஹாராஷ்டிரா மாநில சுற்றுலா & சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே மற்றும் எகா & பைனாகிள் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் சுதிர் மெஹ்தா ஆகியோரின் முன்னிலையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற எரிபொருள் பேருந்துகளை காட்டிலும் இ9 வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானதாக இருக்கும் என வெளியீட்டின்போது தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் பேருந்து என்கிற சிறப்பு பெயர் உடன் விற்பனை செய்யப்பட உள்ள எகா இ9 இரைச்சல் & அதிர்வுகள் இல்லாத பயணத்தை வழங்கும். எகா இ9-இல் முன் & பின்பக்க காற்று சஸ்பென்ஷன் அமைப்புகள் ECAS உடன் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் பேருந்து, ஓட்டுனர் & மாற்று திறனாளி பயணிகளை தவிர்த்து இதர பயணிகளுக்காக மொத்தம் 31 இருக்கைகளை கொண்டுள்ளது.
அத்துடன் 2500மிமீ அகலத்தில் உள்ள இந்த பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்வதற்கும் போதுமான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் வாசல் பகுதிகள் சிறுவ, சிறுமியர் மற்றும் வயதானவர்களின் எளிமையாக பயன்பாட்டிற்கு ஏற்ப தரையில் இருந்து வெறும் 650மிமீ உயரத்தில் தாழ்வாக கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் கேபினில் ஆட்டோ-ட்ரைவ் வசதி, பவர்-உதவி பெற்ற தாழ்வான டெலெஸ்கோபிக் ஸ்டேரிங் உள்ளிட்டவை முக்கிய சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த எகா இ9 எலக்ட்ரிக் பேருந்தின் முன்பக்கம் சிரிப்பு முகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின்போது பேருந்து எதிர்க்கொள்ளும் காற்றலைகளுக்கு ஏற்ப பக்கவாட்டு உடற்பேனல்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன. உட்புற பயணிகளுக்கான ஜன்னல் கண்ணாடிகள் நன்கு அகலமானதாக, கூடுதல் பயண சூழல் பார்வையை வழங்கக்கூடியவைகளாக உள்ளன. இது இ9 எலக்ட்ரிக் பேருந்துக்கு அட்வான்ஸான தோற்றத்தை வழங்குகிறது.
மேலும், வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப வசதிகளை ஒருங்கிணைக்கும் விதமாக வாகன கட்டுப்பாட்டு யூனிட்டையும் இ9 கொண்டுள்ளது. இதனை பைனாக்கிள் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது சொந்த முயற்சியில் வடிவமைத்துள்ளதாம். எடை குறைவான வளையாத இரும்பு மோனோகாக் சேசிஸின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பேருந்தின் உடற்பேனல்கள் எளிதில் துருப்பிடிக்காதவைகளாக பொருத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது
பயணிகளின் பாதுகாப்பிற்கு இபிஎஸ் உடன் முன் & பின்பக்க டிஸ்க் ப்ரேக்குகள், சிசிஎஸ்2 ப்ரோடோகல் விரைவு சார்ஜர், 4 கேமிராக்கள், அவசரகால நிறுத்து பொத்தான், நெருப்பு அணைப்பான், தானியங்கி ஓட்டுனர் உதவி அமைப்பு (ADAS) உள்ளிட்டவற்றை எவா இ9 கொண்டுள்ளது. குறைந்த ஈர்ப்பு விசை மையத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிவேகமான பயணத்தின்போதும், வளைவுகளில் திரும்பும்போதும் பயணிகளின் பாதுகாப்பு இந்த எலக்ட்ரிக் பேருந்தில் உறுதிப்படுத்தப்படும்.
இந்திய அரசாங்கத்தின் சாம்பியன் OEM திட்டத்திலும், இவி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் திட்டத்திலும் அங்கிகரீக்கப்பட்ட ஒரேயொரு கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனமாக பைனகிள் இண்டஸ்ட்ரீஸ் விளங்குகிறது. கூடுதல் விபரங்களுக்கு, https://ekamobility.com என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.